X

மகாமுனி- திரைப்பட விமர்சனம்

ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா ஆகியோரது நடிப்பில், ‘மெளனகுரு’ இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘மகாமுனி’ எப்படி என்பதை பார்ப்போம்.

ஆன்மீக பற்றும், வாழ்க்கையின் தத்துவத்தையும் அறிந்தவராக, வாழ்ந்துக் கொண்டிருக்கும் அப்பாவி ஆர்யாவின் உயிருக்கு காதல் விவகாரத்தால் ஆபத்து வருகிறது. மறுபக்கம் மனைவி, குழந்தை இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு அதிகமாக காட்டாமல் மறைமுக வாழ்க்கை வாழும் மற்றொரு ஆர்யா, அரசியல்வாதியின் அடியாளாக, அவர் சொல்பவர்களை கடத்துவது, எதிரிகளை கொலை செய்ய திட்டம் தீட்டி தருவது என்று இருந்தாலும், வருமையோடு சேர்ந்த வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்க, அதே அரசியல்வாதியினால் அவரது உயிருக்கும் ஆபத்து வருகிறது.

இப்படி வெவ்வேறு பகுதிகளில் வாழும் மகா மற்றும் முனி ஆகிய இரண்டு பேரும் தங்களது உயிருக்கு வரும் ஆபத்தில் இருந்து தங்களை காத்துக்கொண்டார்களா, இல்லையா என்பதை காட்டிலும், இவர்கள் இருவரும் ஒருவரா அல்லது வெவ்வேறு நபரா, என்ற எதிர்ப்பார்ப்போடு சொல்லியிருப்பது தான் படத்தின் கதை.

கதை சாதாரணமாக இருந்தாலும், திரைக்கதையும் அதை படமாக்கிய விதமும் கவனிக்கவும், ரசிக்கவும் வைக்கிறது. சாதாரண காட்சிகள் கூட நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கும் அளவுக்கு மேக்கிங்கில் மிரட்டியிருக்கும் இயக்குநர் சாந்தகுமார், வசனத்தின் மூலமாகவும் நம்மை ஈர்த்துவிடுகிறார்.

மகா மற்றும் முனி என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஆர்யா, தானும் ஒரு நடிகர், என்று காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் விதத்தில் நடித்திருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்குமான தோற்ற வேற்றுமை சிறிதளவு இருந்தாலும், தனது நடிப்பு மூலம் அதை பெரிய அளவில் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கும் ஆர்யாவின் நடிப்பை ரசிகர்கள் மெச்சுவார்கள்.

ஆசை நிறைந்த ஏழ்மை வாழ்க்கை வாழும் பெண்னை பிரதிபலிக்கும் வாழ்க்கையில் இந்துஜா நடித்திருக்கிறார். ஆர்யாவின் மனைவியாக இயல்பாக நடித்திருப்பவர், முகத்தில் கொடுக்கும் ஓவர் ரியாக்‌ஷனை கட்டுப்படுத்தினால் நல்லது.

தைரியமான பணக்கார வீட்டு முரட்டு பெண்ணாக மட்டும் இன்றி முற்போக்கு சிந்தனையுள்ள பெண்ணாகவும் நடித்திருக்கும் மகிமா நம்பியாரின் நடிப்பும் கச்சிதம். அரசியல்வாதியாக வரும் இளவரசும், மேட்டுக்குடி ஆதிக்க குணம் படைத்த தொழிலதிபராக வரும் ஜெயபிரகாஷும் தங்களது கதாபாத்திரத்தை முழுமையடைய செய்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் மெதுவாக படம் நகர்ந்தாலும், ஆர்யா யார்? அவரது பின்னணி என்னவாக இருக்கும்? என்ற எதிர்ப்பார்ப்பை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கும் படம், அடுத்தடுத்த காட்சிகளில் ஒரு வாழ்வியலை சொல்லும் பதிவாக நகர்கிறது.

ரவுடியாக இருக்கும் ஆர்யாவின் உயிருக்கு அவரது எதிரிகளால் ஆபத்து வரும் போது, அவர்கள் யார்? எதற்காக தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள், என்பதை அவரது மனைவியிடம் விவரிக்கும் போது, அதை காட்சியாக எடுத்திருந்தால் எப்படிப்பட்ட விறுவிறுப்பும் வீரியமும் இருந்திருக்குமோ அப்படி ஒரு வீரியத்தோடு இருக்கிறது. இப்படி சில கதாபாத்திரங்கள் சாதாரணமாக பேசும் காட்சிகள் கூட நம்மை கவனிக்கும்படி அழுத்தமாக இருக்கிறது.

கடவுள் பற்றிய புரிதல், தைரியம் என்றால் என்ன, என்பதற்கு இயக்குநர் கொடுத்திருக்கும் விளக்கமும், அதை சுற்றி வரும் வசனங்களும் கைதட்டல் பெறுகிறது. இந்த கதையில் ஜாதி குறித்து பேச இடமில்லை என்றாலும், வாழ்வியலை சொல்லும் போது ஜாதி பற்றியும் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால், அதை அளவோடும், அர்த்தத்தோடும் பேசியது ஆறுதல்.

தமனின் இசையில் பாடல்கள் சுமாராக இருந்தாலும் பின்னணி இசை மிரட்டல், ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் இரண்டு ஆர்யாக்களின் இயல்பான வாழ்க்கையையும், வித்தியாசத்தையும் அசத்தலாக படமாக்கியிருக்கிறார். எடிட்டர் சாபு ஜோசப், ஆர்யாக்களின் வாழ்வியலையும், அவர்கள் யார்? என்பதையும் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில் தெரியப்படுத்தியிருக்கிறார்.

முதல்பாதியில் இருந்த எதிர்ப்பார்ப்பு, சுவாரஸ்யம், இரண்டாம் பாதியில் சற்று மிஸ்ஸிங்கானதோடு, லாஜிக் மீறல்களும் இருக்கிறது. இருப்பினும், படத்தின் காட்சிகளும், அதை படமாக்கிய விதமும் பிரமிப்பாகவும், மிரட்டலாகவும் இருக்கிறது.

ஆர்யா இரட்டை வேடமா அல்லது ஒருவரே இப்படி வெவ்வேறு நபராக வருகிறாரா, என்பதை சஸ்பென்ஸாக நகர்த்தியிருக்கும் இயக்குநர் சாந்தகுமார் இந்த இரண்டு கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் முக்கிய நபர்களாக இருக்கும் ஜெயப்பிரகாஷ் மற்றும் இளவரசு இருவரையும் படத்தின் ஆரம்பத்திலேயே ஒன்றாக காட்டி, அதன் பிறகு திரைக்கதையை ட்விஸ்ட்டோடு நகர்த்தி, இறுதியில் இவர்கள் இணைவதற்கும் இதே கதாபாத்திரங்களை காரணமாக வைத்தது மிரட்டலான இயக்கம்.

மொத்தத்தில், இந்த ‘மகாமுனி’, சாதாரணமான கதையாக இருந்தாலும், சாதாரண மனிதர்களின் வாழ்வியலை அழுத்தமாக சொல்லும் படமாக உள்ளது.

-விமர்சனக் குழு