மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் முக்கிய ஸ்தலமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் விளங்கி வருகிறது. காசிக்கு நிகராக கருதப்படும் ராமேசுவரத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.

குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஆடி, தை மாத அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

அதன்படி நாளை மகளாய அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிக அளவில் குவிவார்கள். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் ராமேசுவரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் அங்கு 24 மணி நேரமும் தூய்மை பணிகள் மேற்கொள்ள 100-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடற்கரை, கோவில் பகுதிகளில் கழிப்பறை, குளியலறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கோவிலை சுற்றியுள்ள 4 ரத வீதிகளிலும் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவில் சன்னதிகள் மற்றும் 22 தீர்த்தங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. அக்னி தீர்த்த கடற்கரை, ராமேசுவரம் கோவில், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 650-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதலாக 100 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தலைமையிலான போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை, விருதுநகர், சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் 15-ந்தேதி வரை பல்வேறு ஊர்களில் இருந்து ராமேசுவரத்திற்கும், பக்தர்கள் ஊர் திரும்ப ஏதுவாக பல நகரங்களுக்கும் 270-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதேபோல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சேதுகரை, தேவிபட்டினம், மூக்கையூர், மாரியூர் ஆகிய பகுதிகளுக்கும் தலா 15 சிறப்பு அரசு பஸ்கள் இயக்ககப்பட உள்ளது.

ரெயில் மூலம் வரும் பக்தர்கள் மண்டபம் வந்து அங்கிருந்து பஸ், கார், ஆட்டோக்கள் மூலம் ராமேசுவரத்திற்கு வருவார்கள். மண்டபத்தில் இருந்தும் கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news