மக்களை காக்கும் உங்களை அரசு உங்களை பாதுகாக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாக்டர் தின வாழ்த்து

டாக்டர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தன்னலமற்று மக்கள் நலம் காக்கும் மகத்தான பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் டாக்டர்கள் அனைவருக்கும் ‘இந்திய டாக்டர்கள் நாளில்’ வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவின் புகழ்பெற்ற டாக்டரும், மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்-மந்திரியுமான டாக்டர் பிதான் சந்திர ராயின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 1-ம் நாள் ‘இந்திய டாக்டர்கள் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது. 80 ஆண்டுகள் வாழ்ந்த டாக்டர். பி.சி.ராய் பிறந்ததும், இறந்ததும் ஜூலை முதல் நாள்தான்.

பிறப்பு எளிதாக அமைவதற்கும், இறப்பில் இருந்து உயிர்களை காப்பதற்கும் மருத்துவ சேவை அவசியமாகிறது என்பதன் அடையாளமாக இந்த நாள் விளங்குகிறது. தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில் டாக்டர்களின் சேவை இன்றியமையாததாய் இருக்கிறது. அதனை உணர்ந்து வெள்ளை உடுப்பு அணிந்த ராணுவம்போல் அல்லும், பகலும் அரும்பணியாற்றுகின்றனர் டாக்டர்கள்.

குறிப்பாக, கொரோனா 2-வது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் தீவிரமாக இருந்த நேரத்தில் தி.மு.க. அரசு அமைந்தது. அப்போது நாம் மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகளில், தளகர்த்தர்களாக – சிப்பாய்களாக – முன்கள வீரர்களாக பணியாற்றி, நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த டாக்டர்களுக்கு இந்த நன்னாளில் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எளிய மக்களின் உயிரையும், உடல்நலத்தையும் பாதுகாக்கும் வகையில், தலைவர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் வலுப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு, மேலும் வலிமைபெற இந்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உங்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்.

இது மக்களின் அரசு. மக்களின் உயிர்காக்கும் டாக்டர்களுக்கான அரசாகவும் என்றும் இருக்கும் என்ற உறுதியினை வழங்குகிறேன். அதன் அடையாளமாகத்தான் கொரோனா தடுப்பு பணியில் தங்கள் இன்னுயிரை ஈந்த டாக்டர்களின் குடும்பத்திற்கு உடனடி நிவாரண உதவியாக ரூ.25 லட்சமும், பணியில் உள்ள டாக்டர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது.

நீங்கள் மக்களை காக்கும் மகத்தான பணியை தொடருங்கள். இந்த அரசு உங்களை பாதுகாக்கும் முன்கள வீரராக செயலாற்றும்; துணை நிற்கும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools