மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம் பட்டியில் டோல்கேட் செயல்பட்டு வருகிறது. இதனை கடந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் அரசமுத்துப்பாண்டியன், மேலூர் தொகுதி செயலாளர் அய்யாவு ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் திடீரென சிட்டம்பட்டி டோல்கேட்டை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். வாகனங்கள் செல்ல முடியாதவாறு டோல்கேட் முன்பு அமர்ந்து கோஷமிட்டனர்.

மதுரை மாவட்ட கலெக்டர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறார். கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சியை தடுக்கிறார். இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதுரை மாவட்ட கலெக்டரை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

தகவலறிந்த மேலூர் டி.எஸ்.பி. சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்றுகை போராட்டத்தால் சிட்டம்பட்டி டோல்கேட் இருபுறமும் வாகனங்கள் அரை மணி நேரத்திற்கு மேல் அணிவகுத்து நின்றது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools