மத்திய அரசால் தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தனியார் பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்கு ஆதரவாக, மாநிலங்களின் மின் நுகர்வினை கட்டுப்படுத்தும் கொள்கையை மத்திய அரசு நிர்ப்பந்திக்கிறது. இதனால் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மோடி அரசு தனது கொள்கையை உடனடியாக திரும்பப் பெற்று, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்திட வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. மின்சாரம், மக்களின் இன்றியமையாத அடிப்படைத் தேவையாக உள்ளது. அன்றாட வாழ்க்கைக்கும், வேலைவாய்ப்பிற்கும் மின்சாரமே அடிப்படையாகும். அனைவருக்கும் தடையற்ற மின்சாரத்தை, நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் கடமையை மாநில அரசுகளே ஏற்றுள்ளன. அதே சமயத்தில் மத்திய அரசாங்கம், தனியார் பெருமுதலாளிகளின் லாபத்தை மனதில் கொண்டு, மின்சார கொள்கையை மாற்றியமைக்க முயற்சிக்கிறது.

தனது போக்கிற்கு மாநில அரசுகளையும், மின்வாரியத்தையும் நிர்ப்பந்திக்கிறது. இதனால் ஏற்படும் சுமை அனைத்தும் சாமானிய மக்களின் தலையிலேயே விடிகிறது. ஏற்கனவே, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும், தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தமிழ்நாட்டின் மீது மத்திய அரசாங்கம் கொடுத்து வருகிறது. அதன் காரணமாக நுகர்வோருக்கு கடுமையான கட்டணச் சுமை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மின் விநியோகத்திலும் லாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட விதிகள் புகுத்தப்படுகின்றன. மோடி அரசின் இந்த போக்கை முன் உணர்ந்துதான் மின்சார திருத்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகு நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாக்கி வைத்திருப்பதாக சொல்லப்படும் ரூ. 926 கோடியோ, ஒட்டுமொத்தமாக மாநிலங்கள் பாக்கி வைத்திருக்கும் ரூ. 5085 கோடிகள் என்பதோ மத்திய அரசால் அனுமதிக்க முடியாத தொகை அல்ல. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களை நடத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய பெருமுதலாளிகள் ரூ.2 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் கட்டணம் பாக்கி வைத்துள்ளார்கள். அவர்கள் அந்த தொகையை செலுத்திட ஆண்டுக்கணக்கில் அவகாசம் கொடுக்கும் மோடி அரசுதான் – 12 மாநிலங்களில் வாழும் 64 கோடி மக்களின் வாழ்க்கையை இருளில் தள்ளுவோம் என்று மிரட்டுகிறது. தனியார் பெருமுதலாளிகள் வங்கியில் கடனாகப் பெற்ற சுமார் 11 லட்சம் கோடிகளை வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அந்த நிறுவனங்களின் பட்டியலைக் கூட வெளியிட அரசு தயங்குகிறது. இதனோடு ஒப்பிட்டால் மாநிலங்களின் பாக்கித் தொகை ஒன்றுமே இல்லை. ஆனாலும் கூட அதனை காரணமாக்கி, பட்டியல் வெளியிட்டு, தனது கொள்கைகளை அமலாக்க நிர்ப்பந்திப்பதன் நோக்கம் என்ன?. பெருமுதலாளிகளுக்கு வெண்ணையும், சாமானிய மக்களுக்கு சுண்ணாம்பும் தடவுவதுதான் மோடி அரசின் கொள்கை என்பதை மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்துகிறது. சாமானிய மக்களின் மீதும், சிறு குறுந் தொழில்களின் மீது மின்வெட்டை சுமத்தும் கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கண்டிக்கிறது. உடனடியாக தனது கொள்கையை திரும்பப் பெற்று அனைத்து மக்களுக்கும் தடையில்லாத மின்சாரத்தை நியாயமான கட்டணத்தில் உறுதி செய்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools