மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு புறக்கணிக்கிறது – பா.ஜ.க குற்றச்சாட்டு

தமிழக பாஜக மாநில செயற்குழுவின் இரண்டு நாள் கூட்டம் வேலூர், அரப்பாக்கம், ரமணி சங்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்பட அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அக்னிபாத் திட்டத்திற்கு பாராட்டு, இளையராஜாவிற்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஓட்டி தமிழக அரசு போலி விளம்பரம் தேடுவதாக இந்த கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. வழிபாட்டு நெறிமுறைகளில் அரசியல் தலையீடு செய்து பாரம்பரிய முறைகளை அரசு சீரழிப்பதாகவும் பாஜக செயற்குழுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தொழில்வளர்ச்சித் திட்டங்களுக்கு திமுக அரசின் ஒத்துழையாமைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகப்பெரிய திட்டங்களை தீட்டி இந்தியாவை தொழில் வளர்ச்சியில் முன்னெடுத்துச் செல்லும் நிலையில், தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக புல்லட் ரயில் திட்டம், பாதுகாப்பு தொழில்வழித்தட திட்டம், ஜவுளி தொழிற் பூங்காக்கள் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதில் திமுக அரசு ஒத்துழைப்பு வழங்காமலும், திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதத்தை ஏற்படுத்துவதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசிற்கு தமிழக வாக்காளர்கள் மத்தியில் நற்பெயர் வந்துவிடக் கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியில் இந்த திட்டங்களை மாநில திமுக அரசு புறக்கணிக்கிறது என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களால் மக்களுக்குத்தான் பலன், தங்களுக்கு தனிப்பட்ட பலன் கிடைக்காதே என்பதால் ஒத்துழைப்பு வழங்க திமுக அரசு தயங்குவதாகவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools