மத்திய பல்கலைக்கழகங்களில் நடக்க இருக்கும் நுழைவு தேர்வை தடுக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இருக்கின்ற பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான 1.8 லட்சம் இருக்கைகளை
நிரப்ப ஏதுவாக 2022-2023 ஆம் கல்வியாண்டிலிருந்து மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, அதாவது Central University Entrance Test (CUET) நடத்தப்படும். 12-ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றவர்கள் இந்தத் தேர்வினை எழுதத் தகுதியுடையவர்கள். பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் தரப்படாது என மத்திய கல்வி அமைச்சகம்
தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்படும் இத்தேர்வுக்கு தி.மு.க. அரசு எதிர்ப்புத் தெரிவித்து இருந்தாலும், நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்டதாகவும்,
நுழைவுத் தேர்வுக்கு இம்மாதம் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு தமிழ் மொழி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் நடத்தப்படும் என செய்திகள் வந்துள்ளன.

இதிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால்,
வருங்காலங்களில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம்
என்ற நிலை உருவாகக்கூடும் என்பதோடு மட்டுமல்லாமல், 12-ம் வகுப்பில் பெறும் மதிப்பெண்ணிற்கு ஒரு மதிப்பு இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

12-ம் வகுப்பு என்பது நுழைவுத் தேர்விற்கான ஒரு தகுதித் தேர்வு போல் ஆகிவிடும். இதன்மூலம் ஏழை, எளிய, கிராமப்புற மாணவ மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த நுழைவுத் தேர்வுக்கு
பெயரளவில் எதிர்ப்புத் தெரிவிக்காமல், இதனை திரும்பப் பெறத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இதனை முளையிலேயே கிள்ளி
எறிய வேண்டிய பொறுப்பு தி.மு.க. அரசுக்கு உண்டு.

நீட் தேர்வில் தும்பை விட்டு வாலைப் பிடித்ததன் காரணமாக ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தற்போது அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல் அல்லாமல், இந்த நுழைவுத்
தேர்வு விஷயத்திலாவது, இதுதான் சரியான தருணம் என்பதை மனதில் நிலைநிறுத்தி, காலந்தாழ்த்தாமல் நுழைவுத் தேர்வு அறிவிப்பினை திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை தி.மு.க.
அரசு எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே உள்ளது.

எனவே, தமிழக முதலமைச்சர் இந்தப் பிரச்சனையை மத்திய அரசின் கவனத்திற்கு உடனே எடுத்துச் சென்று, தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, நுழைவுத் தேர்வு அறிவிப்பினை திரும்பப்பெற
நடவடிக்கை எடுக்குமாறு அ.இ.அ.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools