மன்னிப்பு கேட்க முடியாது, இழப்பீடும் தர முடியாது – டி.ஆர்.பாலு நோட்டீஸுக்கு அண்ணாமலை பதில்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்ட தி.மு.க. மூத்த நிர்வாகிகள் பல கோடி ரூபாய்க்கு சொத்துகளை குவித்துள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வீடியோ வெளியிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் தரப்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசில் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.50 கோடி முதல் ரூ.500 கோடி வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நோட்டீஸ் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு அண்ணாமலை ஏற்கனவே பதில் அனுப்பி இருந்தார். அந்த பதிலில், மன்னிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை, இழப்பீடு தர முடியாது, சட்ட ரீதியாக இந்த வழக்கை சந்திக்க தயார் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்த நிலையில், டி.ஆர்.பாலு அனுப்பிய நோட்டீசுக்கு வக்கீல் பால் கனகராஜ் மூலம் அண்ணாமலை பதில் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. நிர்வாகிகளின் சொத்து பட்டியலை ஆதாரங்களுடன் தான் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். தி.மு.க.வினரின் சொத்து விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் அண்ணாமலை இதை வெளியிட்டுள்ளார்.

யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதை அவர் வெளியிடவில்லை. எனவே அவதூறு சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. டி.ஆர்.பாலு பல நிறுவனங்களில் இயக்குனராக இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அதேபோன்று, பல நிறுவனங்களில் அவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்குகள் இருப்பதற்கும் ஆவணங்கள் உள்ளன. உரிய ஆதாரங்களுடன் தான் டி.ஆர்.பாலு மீது அண்ணாமலை குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். எனவே மன்னிப்பு கேட்க முடியாது, இழப்பீடும் தர முடியாது. அண்ணாமலை இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளார்.

இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools