மல்யுத்த வீரர்களின் கைதால் முதல் நாளே செங்கோல் வளைந்துவிட்டது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். பாராளுமன்ற திறப்பு விழாவன்று மஹிளா மகாபஞ்சாயத் என்ற பெயரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். பாராளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாகச் செல்ல முயற்சித்தனர்.

ஆனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் பேரணியாக சென்றனர். அப்போது, தடையை மீறிச்சென்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவின் போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது.

குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா? என பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools