மாவட்ட பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு – ஆந்திராவில் அமைச்சர் வீட்டுக்கு தீ வைப்பு

ஆந்திரா மாநிலத்தில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு கோனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என மாற்றி அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோனசீமா பரிக்ரக்ஷன சமிதி, கோனசீமா சாதனா சமிதி ஆகிய அமைப்புகள் தீவிர போராட்டம் நடத்தி வந்தன.

இந்நிலையில், அமலாபுரத்தில் உள்ள மாநில போக்குவரத்துத்துறை மந்திரி விஸ்வரூப் வீட்டின் முன் நேற்று ஏராளமானோர் திரண்டு கல்வீசி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திடீரென மந்திரியின் வீடு தீப்பற்றி எரிந்தது.

இதற்கு அங்கிருந்த காஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால் போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக ஆளுங்கட்சி சார்பில் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி போர்க்களம் போல காணப்பட்டது. ஒரு கல்லுாரி பேருந்து, ஒரு அரசுப் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து வன்முறை நடந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools