முக்கிய தலைவர்கள் இல்லாததால் வெற்றி யாருக்கு என்று கணிக்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா தேர்தல் முடிவுகளை உற்சாகத்துடன் எதிர்நோக்கி கொண்டு இருக்கிறது. கருத்து கணிப்புகளும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளன. தமிழகத்தில் கருத்து கணிப்புகள் மாறுபடும். தேசிய அளவில் கணித்து உள்ள இடங்களைவிட அதிகமாக பெறுவோம்.

தமிழகத்தில் கள நிலவரத்தை யாரும் கணிக்க முடியாத சூழ்நிலையாக உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை பெறும். 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும்.

எல்லா கருத்து கணிப்புகளும் சரி என்று சொல்ல முடியாது. ஆனால் கருத்து கணிப்புகளுக்கு பின்னால் பா.ஜனதா இருக்கிறது என்று எப்படி கூறமுடியும்?. தோல்வியை முன் எடுத்து செல்லும்போது, நியாயமாக, ஜனநாயக முறையில் நடந்த தேர்தலையும் கேள்விக்குறியாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் மக்களிடம் தூய்மையான, கடின உழைப்பை கூறி வாக்கு சேகரித்தேன். 20 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு அங்கீகாரம் வேண்டும் என்று மக்களிடம் கேட்டு உள்ளேன். எந்த ஊழல் வழக்கிலும் சிறை தண்டனை பெற்றது கிடையாது. நேர்மையான அரசியல்வாதியாக உள்ளேன். நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன்.

தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி என 2 முக்கிய தலைவர்கள் இல்லாத தேர்தல் என்பதால் வெற்றி யாருக்கு? என கணிக்க முடியாத நிலை உள்ளது. நடிகர் கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன், சீமான் ஆகிய 3 புதிய முகங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்? என்பது தெரியாது.

டெல்லியில் நடந்த கூட்டத்தில் மக்களுக்கான பல திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. மோடி மீண்டும் வரவேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news