முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கை – சிறுவாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீரை திறந்த கேரள அரசு

கோவை மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க, சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை உயர்த்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில் கோவை நகர மக்களின் முக்கியமான குடிநீர் ஆதாரம் சிறுவாணி அணையாகும். தற்போது, கோவை மாநகராட்சி பகுதிக்கு ஒரு நாளில் 101.40 மில்லியன் லிட்டர் குடிநீர் சிறுவாணி அணையில் இருந்து வழங்கப்படுகிறது. கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக கடந்த 1973-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி தமிழகம்-கேரளா இடையில் போடப்பட்ட இந்த 99 ஆண்டு ஒப்பந்தத்தின்படி, ஜுலை 1-ந் தேதி முதல் அடுத்த ஜூன் 30-ந் தேதி வரை ஆண்டுக்கு 1.30 டி.எம்.சி.க்கு மிகாமல் தண்ணீர் தரப்பட வேண்டும்.

இந்நிலையில், கேரளாவின் நீர்ப் பாசனத்துறையானது, சிறுவாணி அணையின் அதிகபட்ச நீர் இருப்பு அளவை, ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட நீர் இருப்பு அளவான 878.50 மீட்டருக்குப்பதில் 877 மீட்டராக தொடர்ந்து பராமரித்து வருகிறது. குறைக்கப்பட்ட அளவான 1.5 மீட்டரின் மூலம், 122.05 மில்லியன் கன அடி நீர் பற்றாக்குறையாகி உள்ளது. இது ஒட்டுமொத்த பற்றாக்குறை அளவில் 15 சதவீதமாகும்.

இது கோடைக்கால மாதங்களில் கோவையின் குடிநீர் தேவையை சமாளிப்பதில் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக, ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள 1.30 டி.எம்.சி.க்கு பதில், 0.484 டி.எம்.சி.யில் இருந்து 1.128 டி.எம்.சி. வரை மட்டுமே ஆண்டுதோறும் நீர் வழங்கப்படுகிறது.

கோவை நகர மக்களின் குடிநீர் பற்றாக்குறையை சந்தித்து வரும் நிலையில் அணையின் கொள்ளளவை 878.50 மீட்டராக உயர்த்த வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியிருந்தார். கேரள நீர்பாசன துறை அதிகாரிகள் கோவை நகருக்கு நேற்று வரை 50 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வழங்கி வந்தனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று கேரள அரசு மற்றும் நீர்பாசனத்துறை அதிகாரிகள் நேற்று இரவு 7.30 மணிக்கு ஒப்பந்தப்படி கோவை நகருக்கு வழங்க வேண்டிய 101.40 எம்.எல்.டி. குடிநீரை திறந்து விட்டனர். இதன் காரணமாக கோவை பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools