முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுவதால் அவர்களுடன் கூட்டணி என்று அர்த்தம் இல்லை – அண்ணாமலை பேச்சு

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி கவர்னர் மாளிகை சென்றடைந்தார். அங்கு தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கட்சியின் மூத்த நிர்வாகிகள், பழைய நிர்வாகிகள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் தேர்தல் போன்ற அரசியல் நிகழ்வுகள் எதுவும் இல்லை என்பதால் பிரதமர் மோடி உடன் நாங்கள் அரசியல் பேசவில்லை.

பா.ஜ.க. எப்போதும் கொள்கை ரீதியாகச் செல்லும் கட்சி. பா.ஜ.க. ஒருபோதும் கொள்கையை மாற்றிக் கொள்ளாது. இன்று நான் முதலமைச்சரை பாராட்டுகிறேன். எப்போதும் ஆளும் கட்சியை விமர்சித்துக் கொண்டு இருக்கத் தேவையில்லை. செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் தொடர்பாக மதுரை ஐகோர்ட் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. மிகச் சரியான தீர்ப்பு அது. நேற்று மாலை முதலே தமிழக அரசு தனது தவறை சரிசெய்யத் தொடங்கி இருந்தது. விளம்பரங்களில் நேற்று முதலே பிரதமர் படம் இடம் பெற்று இருந்தது. ஆளும் கட்சி தானாகச் செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம். மதுரை ஐகோர்ட் தீர்ப்பு முக்கியமானது.

வரும் காலத்தில் தமிழகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இந்த சூழலில் மதுரை ஐகோர்ட் தீர்ப்பு முக்கியமானதாகப் பார்க்கிறோம். அந்தத் தீர்ப்பை வைத்தும் அரசியல் பேச விரும்பவில்லை. இன்று தமிழனாக நான் பெருமை கொள்கிறேன். தமிழர் பாரம்பரியம் உலகம் முழுவதும் இன்று காட்டப்பட்டுள்ளது நமது கலாச்சாரத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. 5000 ஆண்டுகால கலாசாரம் இந்த நிகழ்ச்சியில் பிரதிபலித்தது. இதற்காகத் தமிழக முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் பா.ஜ.க. சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்ச்சியைப் பாராட்டுவதால் கூட்டணி என்று அர்த்தம் ஆகாது என தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools