முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று திருவாரூர் வருகிறார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரும் 24-ம் தேதி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கிடையே, மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று வருகை தருகிறார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமண விழா நாளை (22-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த திருமணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு காலை 11.15 மணிக்கு வருகிறார். அங்கு திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சாலை மார்க்கமாக திருவாரூருக்கு வருகிறார்.

முன்னதாக மாவட்ட எல்லையான கோவில் வெண்ணியில் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனை ஏற்றுக் கொண்டு இரவு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள வீட்டில் தங்குகிறார். நாளை 22-ம் தேதி திருவாரூரில் இருந்து கார் மூலம் மன்னார்குடிக்குச் சென்று மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

தொடர்ந்து அவர் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு அவர் மீண்டும் சாலை மார்க்கமாக திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு ஐ.ஜி. கார்த்திகேயன் மேற்பார்வையில் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools