முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்தநாள் – நாளை தொண்டர்களை சந்திக்கிறார்

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை (மார்ச் 1) தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு காலை 7 மணிக்கு மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

அதன் பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். இதைத் தொடர்ந்து கோபாலபுரம் சென்று கலைஞர் படத்துக்கு மரியாதை செலுத்தி விட்டு தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெறுகிறார். இதைத் தொடர்ந்து சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி எம்.பி. வீட்டுக்கு செல்கிறார்.

அங்கு ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கலைஞர் படத்துக்கு மலர் தூவி வணங்குகிறார். அதன் பிறகு தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டுக்கு வந்து ‘கேக்’ வெட்டி குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதன் பிறகு அண்ணா அறிவாலயத்துக்கு காலை 10 மணியளவில் வருகிறார். அவருக்கு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமையில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. வரவேற்பை பெற்றுக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் நிர்வாகிகள் மத்தியில் ‘கேக்’ வெட்டுகிறார்.

அதன்பிறகு கலைஞர் அரங்கத்துக்கு சென்று கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், தொண்டர்களை சந்திக்கிறார். கூட்டணி கட்சித் தலைவர்களும் அங்கு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளனர். சென்னை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் பிரமுகர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து கூற இருப்பதால் கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்துவதற்காக கலைஞர் அரங்கத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

கட்சி நிர்வாகிகள் பழத்தட்டுகள், மாலைகள், சால்வைகள், புத்தகங்கள், பரிசு பொருட்கள் கொண்டு வந்து வழங்குவார்கள் என்பதால் அவர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் கலைஞர் அரங்கத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools