முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஒன்றாக சேர்ந்து பிரசாரம் – செல்வப்பெருந்தகை தகவல்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற மாநிலங்களவை பதவி காலம் 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் போது எல்.முருகனை எதற்காக நீலகிரியில் வேட்பாளராக அறிவித்தீர்கள். கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு தென்சென்னையில் வேட்பாளராக அறிவித்தது ஏன்? தென்சென்னையில் பிறந்த மத்திய மந்திரி ஜெய்சங்கரை ஏன் தென்சென்னையில் நிறுத்தவில்லை? திருச்சியில் பிறந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ஏன் திருச்சியில் சீட் கொடுக்கவில்லை?

ஜெய்சங்கருக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் ஒரு நீதி, பட்டியல் இனத்தில் பிறந்த எல்.முருகனுக்கும், பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கும் ஒரு நீதியா? இதுதான் பாசிச பா.ஜனதா. நிர்மலா சீதாராமனையும், ஜெய்சங்கரையும் மேட்டுக்குடிகளாக வைத்துக்கொண்டு எல்.முருகனையும், தமிழிசை சவுந்தரராஜனையும் வெயிலில் வாக்கு சேகரிக்க அனுப்பியுள்ளார்கள். இது தான் பா.ஜனதாவின் பாசிச முகம்.

நாங்கள் ஒரு கிறிஸ்துவர், ஒரு முஸ்லிமுக்கு தொகுதி ஒதுக்க முயற்சித்தோம். நாங்கள் கேட்ட தொகுதி கிடைக்காததால் முஸ்லிமுக்கு ஒதுக்க முடியவில்லை. கிறிஸ்தவருக்கு தொகுதி ஒதுக்கி உள்ளோம். ராமநாதபுரத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் ஐ.யூ.எம்.எல். வேட்பாளர் எங்கள் வேட்பாளர் தான். அடுத்து வரும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தொகுதி ஒதுக்கப்படும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்கள். விரைவில் சுற்றுப்பயண விவரத்தை வெளியிடுவோம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools