X

மும்பையில் உள்ள 4 ஆயிரம் ஏழைகளுக்கு நிதியுதவி செய்த சச்சின்!

india-can-win-in-australia-sachin

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.

இந்த ஊரடங்கு 3-வது கட்டமாக வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் தினசரி கூலி தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மும்பையில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு தன்னார்வ அமைப்பு மூலம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

மும்பையில் உள்ள ‘ஹய் 5’ அறக்கட்டளைக்கு அவர் குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்கி உள்ளார். இந்த அறக்கட்டளை தெண்டுல்கரிடம் பெற்ற பணத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் 4 ஆயிரம் பேருக்கு நிவாரண நிதியாக வழங்கும்.

தெண்டுல்கர் ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிக்கான பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், மராட்டிய மாநில அரசின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் வழங்கியிருந்தார்.

இது தவிர அப்னாலயா என்ற அறக்கட்டளை மூலம் 5000 ஏழை மக்களுக்கு ஒரு மாதத்திற்கான நிதி செலவை ஏற்றார்.

தற்போது அவர் மீண்டும் நிதியுதவி அளித்துள்ளார். இதற்காக அந்த அறக்கட்டளை சார்பில் தெண்டுல்கருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்திய அணி கேப்டன் வீராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் மும்பை காவல்துறை கொரோனா பாதுகாப்பு நிதிக்காக தலா ரூ. 5 லட்சம் அளித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு அதிகமாக பாதிக்கப்பட்டு முதலிடத்தில் இருப்பது மராட்டிய மாநிலம் தான். அங்கு 20,228 பேரை நோய்த்தொற்று தாக்கியுள்ளது. 2101 பேர் பலியாகி உள்ளனர். மும்பையில் மட்டும் 12,864 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 489 பேர் இறந்துள்ளனர்.

Tags: south news