மும்பையில் ஓட்டல் தொடங்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி. உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் கோலி 61-வது இடத்தில் உள்ளார். அவர் பல்வேறு விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்கிறார். அவரது ஆண்டு வருமானம் ரூ.200 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விராட் கோலி, ஓட்டல் தொழிலில் குதித்துள்ளார். அவர் மும்பையில் ரெஸ்டாரண்டை தொடங்குகிறார். மறைந்த பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களாவில் ரெஸ்டாரண்ட்டை விராட் கோலி நடத்த உள்ளார். இந்த பங்களா, மும்பை புறநகர் பகுதியான ஜீஹுவில் உள்ளது. இது தொடர்பாக கிஷோர்குமாரின் மகன் சுமித்குமாரை சந்தித்த விராட் கோலி, ஓட்டல் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளார்.

அந்த பங்களாவில் ரெஸ்டாரண்ட் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. அக்கட்டிடம் கோலிக்கு 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. பங்களாவில் ஏராளமான தாவரங்கள் உள்ளன. அவைகள் அகற்றப்படமாட்டாது என்றும் உணவகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பங்களாவில் 4 ஆண்டுகளுக்கு முன்பு ரெஸ்ட்ராண்ட் அமைக்கப்பட்ட போது, மாநகராட்சி சார்பில் சட்ட விரோத கட்டுமானத்துக்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது புதிய உணவகம், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா, மும்பை கடற்கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலிபாக் பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை வாங்கி உள்ளனர். ஏற்கனவே இப்பகுதியில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் ரோகித் சர்மா, நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர்சிங், நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நிலம், வீடு வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools