X

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 30 டி.எம்.சி. தண்ணீர்!

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 2 முறை முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 142 அடியை எட்டியது. தற்போது மழை இல்லாததால் நீர் வரத்து குறைந்து அணையின் நீர் மட்டம் 120.90 அடியாக உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் போக சாகுபடி முடித்து 2-ம் போக சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை 7 மாதத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 30 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு 7 மாதத்தில் 30 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்துள்ளது சாதனை என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அணையின் நீர் மட்டத்தை உயர்த்த விடாமல் கேரள அரசு பல்வேறு இடையூறுகள் செய்து வந்தது. இந்த நிலையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் திட்டமிட்ட செயலினால் இது சாத்தியமாயிற்று.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததால் 2 முறை அணை நிரம்பி தமிழகத்துக்கு 30 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

அணையின் உரிமையை பெறும் விவகாரத்தில் தமிழக பொதுப்பணித்துறையினர் சரியான நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர். இது வருங்காலங்களிலும் தொடரும் என்றனர்.

Tags: south news