மைதானத்தில் பயிற்சி மேற்கொண்ட இந்திய வீரர்! – பிசிசிஐ அதிருப்தி

கொரேனா வைரஸ் காரணமாக ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

ஊரடங்கால் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள், கேப்டன் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் வீட்டிலிருந்துபடி உடற்பயிற்சி செய்து வருகிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி தனது பண்ணைத் தோட்டத்தில் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீரர் ‌ஷர்துல் தாகூர் மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டத்தில் உள்ள ஒரு மைதானத்தில் நேற்று பயிற்சி மேற்கொண்டார். வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்ட முதல் கிரிக்கெட் வீரர் ஆவார்.

ரசிகர்கள் இல்லாமல் வீரர்கள் மைதானங்களில் பயிற்சி பெற மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்ட ‌ஷர்துல் தாகூர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிருப்தி அடைந்துள்ளது.

பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் உள்ள அவர் கிரிக்கெட் வாரியத்திடம், எந்தவித அனுமதியும் பெறாமல் வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிருப்தி அடைந்துள்ளதாக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது ‘‘‌ஷர்துல் தாகூர் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெறாமல் வெளிபுறப் பயிற்சியில் ஈடுபட்டது துரதிர்ஷ்டவசமானது. ஒப்பந்த வீரர்களை நாங்கள் வெளிப்புற பயிற்சிக்கு அனுமதிக்கவில்லை. அவராகவே சென்று பயிற்சியில் ஈடுபட்டது வருத்தமளிக்கிறது. இது நல்ல முடிவு அல்ல’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news