X

யாஸ் புயல் பாதிப்பு! – ஒடிசா முதல்வருடன் பிரதமர் மோடி ஆய்வு

வங்க கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசாவின் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே நேற்று முன்தினம் கரை கடந்தது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

10-க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களான கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. இதேபோல் ஒடிசாவில் பாலசோர் மற்றும் பத்ராக் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்ய உள்ளார்.

இதற்காக விமானம் மூலம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்றடைந்தார். அங்கு புயல் பாதிப்பு மற்றும் சேத விவரங்கள் தொடர்பாக முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ஆய்வு நடத்தினார். பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.