ரத்ததானம் செய்த எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபரின் உறவினர் பெண், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்காக அந்த வாலிபர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ரத்ததானம் வழங்கினார். ஆனால், அந்த ரத்தம் அவருடைய உறவினர் பெண்ணுக்கு ஏற்றப்படவில்லை. ரத்த வங்கியில் இருந்து கைமாறி சென்ற அந்த ரத்தம்தான் சாத்தூர் ஆஸ்பத்திரியில் 9 மாத கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது.

இந்தநிலையில் வெளிநாடு செல்ல முயற்சி மேற்கொண்ட அந்த வாலிபர், அதற்காக மதுரையில் தனியார் நிறுவனம் மூலம் உடல்-ரத்த பரிசோதனை செய்துகொண்டார். அப்போது, அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் சிவகாசி ரத்த வங்கிக்கு சென்று தன்னிடம் எடுக்கப்பட்ட ரத்தத்தை வேறு யாருக்கும் செலுத்த வேண்டாம் என கூறினார். அதற்குள் அந்த ரத்தம் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ரத்தத்தை ஏற்றியதால் கர்ப்பிணி எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகி இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் விரக்தி அடைந்த அந்த வாலிபர் நேற்று வீட்டில் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news