X

ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்கும் இந்தியா

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் கடந்த ஜூன் 15ம் தேதி அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பிறகு, இந்தியா – சீனா உறவில் பெரும் விரிசல் விழுந்துள்ளது. இந்திய அரசு, சீனாவுடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார கொள்கைகளில் பெரும் மாற்றத்தை முன்னெடுத்துள்ளது.

சீனா பொருட்கள் இறக்குமதியை குறைப்பது, சீன நிறுவனங்களின் இந்திய முதலீடுகளை தவிர்ப்பது, சீனாவின் 59 மொபைல் செயலிகளுக்கு தடை என இந்திய அரசாங்கம், சீனாவுடனான வர்த்தக உறவை குறைக்க தொடங்கியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், சீனாவுடனான விவகாரத்தில் ராணுவ ரீதியிலும் கொள்கைகளை மாற்றியுள்ளது இந்திய அரசு. எல்லையில் இருக்கும் இந்திய ராணுவத்தினர், சூழலுக்கு ஏற்ப அவர்களே முடிவெடுக்கலாம். சீன ராணுவம் தாக்குதல் நடத்தினால் இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கலாம் என ராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது.

இந்தியா – சீனா எல்லை விவகாரத்தில் இன்னும் சுமூக தீர்வு காணப்படவில்லை. பதற்றமான சூழலே நிலவுகிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிழக்கு லடாக்கில் லே பகுதியில் ஆய்வு செய்யவுள்ளார். நாளைக்கு அவர் லடாக் செல்லவிருந்த நிலையில், அந்த பயணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இப்படியாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான உறவில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், ரஷ்யாவிடமிருந்து 33 போர் விமானங்களை வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள 59 மிக் -29 ரக விமானங்களை மேம்படுத்துவதோடு, 12 எஸ்.யு-30 எம்.கே.ஐ ரக விமானங்கள் மற்றும் 21 மிக்-29 ரக விமானங்கள் உட்பட ரஷ்யாவிடமிருந்து 33 புதிய போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்களின் மொத்த செலவு ரூ .18,148 கோடியாக இருக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.