ரஷ்ய வெளியுறவு மந்திரி இந்தியா வந்தார் – இன்று பிரதமர் மோடியுடன் உக்ரைன் போர் குறித்து ஆலோசனை நடத்துகிறார்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார்.

அவரது அதிகாரப்பூர்வ பயணத்தை வரவேற்பதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் இன்று பிரதமர் மோடியையும், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரையும் ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரோவ் சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின்போது உக்ரைன் மீது ரஷியா எடுத்துள்ள நடவடிக்கை மற்றும் அந்நாட்டுடனான அமைதிப் பேச்சு வார்த்தை குறித்து லாவ்ரோவ் பிரதமர் மோடியிடம் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷியா-உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா இதுவரை நடுநிலையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது.

போரை கைவிட்டு இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ரஷிய வெளியுறவு மந்திரியின் இந்திய பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools