ராஃபா மீது தக்குதல் – இஸ்ரேல் பிரதமரிடம் கவலை தெரிவித்த ஜோ பைடன்

ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டுவதற்காக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. காசாவின் வடக்கு பகுதியை துவம்சம் செய்து விட்டது. இங்கிருந்து பெரும்பாலான மக்கள் தெற்குப் பகுதியான ரஃபா, கான் யூனிஸ்க்கு இடம் மாறினர். கான் யூனிஸ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான இலக்கை எட்ட வேண்டுமென்றால் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும். அதற்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் எகிப்து-காசா எல்லை மூடப்படும் அபாயம் ஏற்படும். மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இதற்கிடையே அங்குள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார். அப்போது ரஃபா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதலுக்குப் பதிலாக வேறு வழிகள் இருந்தால் அதை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதற்கு நேதன்யாகு வேறு வழிகள் இருந்தால் கடைபிடிக்க முயற்சி செய்கிறோம் என உறுதி அளித்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் சுமார் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவார்கள். காசா முனையில் மொத்தம் 2.3 மல்லியன் பாலஸ்தீனர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் தற்போது 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போர் காரணமாக ரஃபா பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இவர்களை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சிப்போம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools