ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் – அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா எச்சரிக்கை

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கும், ராகுல் காந்திக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின் ஒரு பகுதியாக அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று கடைசி நாளாக நடைபயணம் மேற்கொள்கிறார்.

நேற்று முன்தினம் கவுகாத்தியில் நுழைவதற்கு அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தடைவிதித்திருந்தார். அதையும் மீறி ராகுல் காந்தி கவுகாத்தியில் நுழைய முயன்றார். இதனால் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், ஹிமாந்தா பிஸ்வா சர்மா உத்தரவின்பேரில் போலீசார் ராகுல் காந்தி மீது மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். நேற்றைய நடைபயணத்தின்போது, என் மீது இன்னும் அதிகமாக வழக்குகள் போட முடியும். அதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா பகிரங்கமாக மிரட்டும் விதமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவிக்கையில் “நாங்கள் சிறப்பு விசாரணைக்குழு அமைப்போம். இந்த குழு ராகுல் காந்திக்கு எதிரான வழக்குகள குறித்து விசாரணை நடத்தும். மக்களவை தேர்தலுக்கு பின்னர் நாங்கள் அவரை கைது செய்வோம். தற்போது நடவடிக்கை எடுத்தால், இது அரசியல் நடவடிக்கை எனக் கூறுவார்கள். எங்களிடம் ஆதாரம் உள்ளது. கவுகாத்தில் மக்களை தூண்டும் வகையில் பெரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news