ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்டம் – விண்ணப்பங்களை பெற சென்னை முழுவதும் 3,550 மையங்கள் அமைப்பு

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அந்தந்த மாவட்ட கலெக்டர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக சென்னையில் வீடுவீடாக விண்ணப்பம் கொடுக்க தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணிகள் நடை பெற்று வருகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை முழுமையாக பயன்படுத்த உள்ளோம். ரேஷன் கடை ஊழியர்களுடன் இணைந்து இவர்கள் வீடு வீடாக விண்ணப்பம் வழங்குவார்கள்.

பொது மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் 2 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் 1,417 ரேஷன் கடைகள் உள்ளது. இதனால் மொத்தம் 3,550 மையங்கள் அமைக்க முடிவு செய்து உள்ளோம்.

வருகிற 24-ந் தேதிக்கு பிறகு இந்த மையங்கள் முழுமையாக செயல்பட தொடங்கும். கைரேகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் மெஷின் ஒவ்வொரு மையத்திலும் வைக்கப்படும். இந்த மையங்களுக்கு வரும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news