ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு சென்றால் கணக்கு காட்ட வேண்டும் – தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு

பாராளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அமைக்கப்படும் வாக்குச்சாவடிகள் எந்தெந்த பள்ளிகளில் அமைக்கப்பட வேண்டும் என்ற பட்டியல் பாகம் வாரியாக தயாரிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

பாராளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள 68 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நிழற் பந்தல்கள், நாற்காலிகள், குடிநீர் வசதி அமைத்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளமும் அமைக்கப்படுகிறது. இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 7 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு உள்ளன.

இந்த பயிற்சி வகுப்புகளுக்கு வராத ஊழியர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி விளக்கம் பெற்றுள்ளனர். கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல்நலம் சரியில்லாத பணியாளர்கள், மருத்துவ காரணங்கள் கூறி இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே தேர்தல் பணிக்கு யாரையும் கட்டாயப்படுத்துவது கிடையாது. பயிற்சி வகுப்புக்கு வராத ஊழியர்கள் அடுத்து நடைபெறும் பயிற்சி வகுப்புக்கு வந்து விடுகிறார்கள்.

இந்த தேர்தலில் ஆண் ஊழியர்களைவிட பெண் ஊழியர்கள் தான் அதிகம் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எவ்வளவு பேர் வராமல் உள்ளனர் என்ற விவரம் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் பட்டியல் சேகரித்து அதன் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குசாவடியில் தேர்தல் நடத்தும் ஊழியர்கள் முழுவதும் பெண்களாக இருப்பார்கள். இதேபோல் ஒரு வாக்குச் சாவடியில் தேர்தல் பணியை முற்றிலும் மாற்றுத் திறனாளிகள் கவனிப்பார்கள்.

இளம் தலைமுறையாக உள்ள அரசு ஊழியர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் மாவட்டத்துக்கு ஒன்று அமைக்கப்படும். தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வாகன சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 702 பறக்கும் படைகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் இப்போது கூடுதலாக 191 படைகள் உருவாக்கப்படடு 893 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 702 நிலைக் குழுக்களின் எண்ணிக்கையும் இப்போது 906 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதற்கு கணக்கு வேண்டும். இந்த தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வணிக அமைப்புகள் கடிதம் கொடுத்துள்ளன. இதேபோல வேறு சிலரும் மனு கொடுத்திருந்தனர். இவற்றை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஆனால் அதற்கு அங்கிருந்து பதில் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools