ரெயில்வே நிலங்களை நீண்ட வருடங்களுக்கு தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அமைச்சகம் ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ரெயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை தனியாருக்கு குத்தகைக்கு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுவரை ரெயில்வே நிலங்கள் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு அளிக்கப்பட்டு வந்தது. தற்போது நீண்ட காலத்திற்கு ரெயில்வே நிலங்கள் குத்தகை விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரெயில்வே நிலத்தின் மதிப்பில் 1.5 சதவிகிதத்தை குத்தகை தொகையாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரெயில்வே நிலங்களை நீண்டகால குத்தகைக்கு விடுவதால், நாடு முழுவதும் 300 சரக்கு கையாளும் முனையங்கள் அமைய வாய்ப்புள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதன் மூலம், ரெயிவே சரக்கு போக்குவரத்து அதிகரிப்பதுடன் தொழில்துறையின் சரக்கு போக்குவரத்திற்கான செலவு குறையும். ரெயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும். மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகம், தொலை தொடர்பு கேபிள், சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பொதுப்பணிகள், வளர்ச்சியடையும். மேலும் 1.2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல் கேரள மாநிலம் ஜே.எல்.என்.மைதானம் முதல் தகவல் பூங்கா வரையிலான கொச்சி மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools