X

லாராவின் சாதனை விவகாரம்! – சர்ச்சைக்கு உள்ளான ஆஸ்திரேலிய கேப்டன்

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா 2004-ம் ஆண்டு ஆன்டிகுவாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆட்டம் இழக்காமல் 400 ரன்கள் குவித்ததே இந்த நாள் வரைக்கும் டெஸ்ட் இன்னிங்சில் ஒரு வீரரின் அதிகபட்சமாக உள்ளது.

அடிலெய்டு டெஸ்டில் வார்னர் 300 ரன்களை எட்டியதும் அவரது அடுத்த இலக்கு லாராவின் சாதனையை தகர்ப்பதாகத் தான் இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் தொற்றிக் கொண்டது. ஆனால் பிராட்மேனின் அதிகபட்ச ஸ்கோரை வார்னர் தாண்டியதும் டிக்ளேர் செய்வதாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் நெட்டிசன்கள் டிம் பெய்னை சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள். ‘இன்னும் ஒரு மணி நேரம் விளையாட அனுமதி அளித்து இருந்தால் வார்னர் 400 ரன்களை கடந்திருப்பார். பெய்ன் தவறான முடிவை எடுத்து விட்டார், அதனால் லாராவின் சாதனை தப்பி விட்டது’ என்று சரமாரியாக விமர்சித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர், ‘3 நாள் எஞ்சியிருப்பதால் ஆஸ்திரேலியாவினால் வெற்றி பெற முடியும். அதனால் வார்னரை உலக சாதனைக்காக ஆட விட்டிருக்கலாம். அவர் விளையாடிய விதத்தை பார்க்கும்போது, மேலும் 1 மணி நேரமே தேவைப்பட்டிருக்கும்’ என்றார்.

அதே நேரத்தில் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஆஸ்திரேலியாவின் டிக்ளேர் முடிவு எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில் ஆஸ்திரேலியர்கள் எப்போதும் தனிநபர் சாதனையை விட அணியின் நலனுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: sports news