X

வங்கக்கடலில் இறக்கப்பட்ட ககன்யான் விண்கலம் இஸ்ரோவிடம் ஒப்படைப்பு

அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி பல்வேறு விதமான ஆய்வுகளை செய்து வருகின்றன.

விண்வெளி ஆய்வில் வியக்க வைக்கும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இந்தியா இதுவரை மனிதர்களை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பவில்லை. எனவே மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் கனவு திட்டமாக வைத்திருந்தனர்.

இந்த திட்டத்தை செயல்படுத்த ககன்யான் என்ற விண்கலம் உருவாக்கப்படுகிறது. இந்த கனவு திட்டத்தை இன்னும் 2 ஆண்டுகளில், அதாவது 2025-ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக, 3 கட்டங்களாக ககன்யான் விண்கலம் போன்று மாதிரி விண்கலத்தை வைத்து சோதனை நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.

ராக்கெட் விண்ணில் ஏவப்படும்போது ஏதாவது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் விண்வெளி வீரர்கள் தப்பிப்பதற்காக “க்ரூ எஸ்கேப் சிஸ்டம்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பில் உள்ள பாராசூட்டுகள் மூலம் பூமியிலோ அல்லது கடலிலோ விண்வெளி வீரர்கள் தரை இறங்கி தப்ப முடியும். அதன்படி இந்த முதல் கட்ட சோதனை நேற்று முன் தினம் வெற்றிகரமாக நடந்தது. திட்டமிட்டபடி, குறிப்பிட்ட நேரத்தில் பாராசூட்டுகளுடன் மாதிரி விண்கலம் வங்கக்கடலில் இறங்கியது.

இந்நிலையில், சோதனை முறையில் விண்ணில் ஏவ அனுப்பப்பட்ட ககன்யான் விண்கலம், பாராசூட் மூலம் வங்கக்கடலில் இறக்கப்பட்டதை இந்திய கடற்படையினர் மீட்டு, சென்னை துறைமுகத்திற்குக் கொண்டு வந்து இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 4 டன் எடை கொண்ட விண்கலத்தை கண்டெய்னர் வாகனத்தில் ஏற்றி சிஐஎஸ்எப் பாதுகாப்பு மூலம் துறைமுகத்தில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு எடுத்துச் சென்றனர்.