வட சென்னையில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள்! – அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூர் சுங்கச்சாவடி முதல் எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் வரை திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.2.72 கோடியில் 363 மின்கம்பங்கள் கொண்ட 726 மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த மின்விளக்குகளை அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பென்ஜமின் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

வடசென்னையின் நுழைவு வாயிலாக இருப்பது எண்ணூர் விரைவு சாலை. சென்னை துறைமுகத்தில் இருந்து செல்லும் 90 சதவீத வாகனங்கள் இந்த சாலை வழியாகத்தான் சென்றுவருகின்றன. இன்னும் 5 ஆண்டுகளில் வடசென்னையின் தோற்றத்தை தென்சென்னைபோல மாற்ற ரூ.16 ஆயிரம் கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

‘ஸ்மார்ட் கார்டு’ திட்டம் மூலம் டீசல் மானியம் நேரடியாக மீனவர்களுக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சித்தேர்தல் விவகாரத்தில் தமிழக மக்கள் அதிகளவில் கோபமாக இருப்பது மு.க.ஸ்டாலின் மீதுதான். 2016-ல் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்தக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டார். தற்போது 2019-ம் ஆண்டிலும் முட்டுக்கட்டை போடுகிறார்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தற்போது தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சித்தேர்தலில் எந்த வார்டு, யாருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது? என்பது இணையதளத்திலேயே கொடுக்கப்பட்டு உள்ளது.

பல இடங்களில் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வேண்டாம் என்று கூறிய தி.மு.க.வினர், தற்போது நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வேண்டும் என்கின்றனர். தி.மு.க.வினர் குழப்பத்திலேயே உள்ளனர். ஆனால் தேர்தலை கண்டு அ.தி.மு.க. என்றுமே அஞ்சுவது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news