வருங்கால வைப்புநிதிக்கான குறைக்கப்பட்ட வட்டி அதிகம்தான் – அமைச்சர் நிர்மலா சீதாராமன்

 

பாராளுமன்ற மாநிலங்களவையில் நிதி ஒதுக்க மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான (இ.பி.எப்.) வட்டி விகிதத்தை 8.1 சதவீதமாக குறைக்க இ.பி.எப்.ஓ. அமைப்பு சிபாரிசு செய்துள்ளது. அது இன்னும் மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு
வரவில்லை.

வட்டி குறைப்பு தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த கவலைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால், சுகன்யா சம்ரிதி யோஜனாவுக்கு 7.6 சதவீதமும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கு 7.4 சதவீதமும், பொது சேமநல நிதிக்கு 7.1 சதவீதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கி, வைப்புநிதிக்கு வழங்கும் அதிகபட்ச வட்டியே 6.3 சதவீதம்தான்.

இவற்றுடன் ஒப்பிடுகையில், வருங்கால வைப்புநிதிக்கான குறைக்கப்பட்ட வட்டி அதிகம்தான். இ.பி.எப்.ஓ. அமைப்பில் தொழிலாளர்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளதை கவனத்தில் கொள்ள
வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, இந்த நிதி ஒதுக்க மசோதா, மக்களவைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. 2018-2019 நிதிஆண்டில் மேற்கொண்ட செலவினங்களுக்கான மற்றொரு நிதி ஒதுக்க மசோதாவும்
மக்களவைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இவை ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆகும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools