வீட்டு தோட்டத்தில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிக்காத குண்டு கண்டெடுப்பு – இங்கிலாந்தில் பரபரப்பு

இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள டேவன் (Devon) பிராந்தியத்தில் உள்ளது பிளைமவுத் (Plymouth) துறைமுக நகரம். இந்நகரின் செயின்ட் மைக்கேல் அவென்யு (St. Michael Avenue) பகுதியில் வசித்து வந்த ஒருவர் தனது மகளின் வீட்டின் பிற்பகுதியை விரிவாக்கம் செய்ய கட்டுமான நிபுணருடன் ஆலோசித்து பணிகளை தொடங்கினார்.

அப்போது மண்வெட்டியினால் அங்கு தோண்டும் போது ஒரு பொருளின் மீது அது இடித்தது. உடனடியாக வெளியே எடுக்க முடியாத அளவிற்கு பெரிதாக இருந்த அந்த பொருளை நீண்ட முயற்சிக்கு பிறகே அவர்களால் காண முடிந்து. தனது மனைவியின் ஆலோசனையின் பேரில், பெரிய உலோக உருண்டை வடிவிலான அந்த பொருளின் புகைப்படங்களை அந்த உரிமையாளர், காவல் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பினார்.

சுமார் 15 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், அவர் வீட்டிற்கு காவல்துறை அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் வந்திறங்கினர். அந்த பொருள் ஒரு “வெடிகுண்டு” என்றும் அதை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகளுக்காக வந்துள்ளதாக தெரிவித்த அவர்கள், அந்த வீட்டின் சுற்றுப்பகுதியில் உள்ள அனைவரையும் தொலைதூரம் போகச் சொல்லி உத்தரவிட்டனர். அப்பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது.

அந்த உலோக பொருள் இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளில் ஒன்று என்பதால், அதனை அங்கேயே வெடிக்க முயன்றால் பல வீடுகள் நாசமடையலாம் என்பதால் நீண்ட ஆலோசனைக்கு பிறகு அந்த வெடிகுண்டை அந்த தோட்டத்தில் இருந்து, மிக பத்திரமாக வெளியே எடுத்து, ராணுவ வாகனத்தில் ஏற்றி, சுற்றி ஏராளமான மணல் மூட்டைகளை அடுக்கி, ஆட்கள் நடமாட்டமில்லாத சாலைகளின் வழியே எடுத்து சென்று, பின் ஒரு பெரிய காற்றடைத்த ரப்பர் படகில் ஏற்றி, கடலில் நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்களின் மேற்பார்வையில், எந்த பாதிப்புமின்றி அந்த குண்டு கடலில் வெடிக்க செய்யப்பட்டது. சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகே அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். வெடிகுண்டு வெடித்தால் அதன் தாக்கம் 4,300 கட்டிடங்களுக்கும், பொதுமக்களில் 10,320 பேருக்கும் இருந்திருக்கும் என பிளைமவுத் நகர கவுன்சில் தெரிவித்தது.

500 கிலோ எடையுள்ள இந்த வெடிகுண்டு இரண்டாம் உலக போரில் இங்கிலாந்தில் வீசப்பட்டு வெடிக்காத பல குண்டுகளில் ஒன்று என வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools