வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார்.

குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் தோல்வியடைந்தனர். ஆனால், அதிபர் டொனால்டு டிரம்ப் தொடக்கத்தில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்துவந்தார்.

இதற்கிடையில், தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது.

அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து அதிகாரத்தை கையில் எடுத்த துணை அதிபர் மைக் பென்ஸ் தேசிய பாதுகாப்பு படையினரை அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்தினார்.

அதிபர் டிரம்பின் உத்தரவின்றி துணை அதிபர் மைக் பென்ஸ் இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும், அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார் என்ற அறிவிப்பை பாராளுமன்றத்தில் பென்ஸ் உறுதிபடுத்தினார்.

இதன் மூலம் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்று விழாவில் 46-வது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார்.

பதவியேற்பு விழாவில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் பங்கேற்க உள்ளார். ஆனால், ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கப்போவதில்லை என தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜோ பைடன் பதவியேற்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாகவே டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையை காலி செய்துவிட்டு வாஷிங்டன்னில் இருந்து விமானம் மூலம் புளோரிடா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லஹொ என்ற தனது பிரம்மாண்டமான பண்ணைவீட்டில் குடும்பத்தினருடன் டிரம்ப் குடியேற உள்ளார். புளோரிடா கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட பண்ணைவீட்டில் தங்க உள்ள டொனால்டு டிரம்ப் தன்னுடன் வெள்ளைமாளிகையில் பணிபுரிந்த சிலரையும் பண்ணைவீட்டில் பணிக்கு அழைத்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools