X

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் – 103 ரன்களுக்கு வங்காளதேசம் ஆல் அவுட்

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் , 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் பந்து வீச்சில் சிக்கியது.

ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 51 ரன்னில் வெளியேறினார் , இறுதியில், வங்காளதேச அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டும், ரோச், கைல் மேயர்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. கேப்டன் பிராத்வெயிட் நிதானமாக ஆடினார். முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வெயிட் 42 ரன்னுடன் களத்தில் உள்ளார்.