வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி – நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 3-வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்தது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. தொடக்க வீரர் ஷாய் ஹோப் 51 ரன் எடுத்து அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் மேயர்ஸ் சதம் அடித்தார். அவர் 110 பந்தில் 105 ரன் எடுத்து அவுட் ஆனார்.

அதன்பின் கேப்டன் பூரன் அதிரடியாக விளையாட மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். பூரன் 55 பந்தில் 91 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி, 9 சிக்சர்கள் அடங்கும். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 301 ரன் எடுத்தது.

அதன் பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் பின் ஆலன் 3 ரன்னில் வெளியேறினார். மார்டன் குப்தில் 57 ரன்னிலும், டேவன் கன்வே 56 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன் பின் டாம் லாதம் (69 ரன்), மிட்செல் (63 ரன்) ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இருவரும் அவுட் ஆன பிறகு ஜேம்ஸ் நீசம் 11 பந்தில் 34 ரன் எடுத்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.

நியூசிலாந்து 47.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 307 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்றது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசும், 2-வது போட்டி யில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools