ஷில்பா ஷெட்டிக்கு ஹாலிவுட் நடிகர் முத்தம் கொடுத்த வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, கடந்த 2007-ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த ஏய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு ஹிரியும் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சி மேடையில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நடிகர் ரிச்சர்டு கன்னத்திலும், கையிலும் முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சி மேடையில் நடிகை ஷில்பா நடிகர் ரிச்சர்டின் இந்த செயல் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் இருந்ததாக கூறி இந்திய கலாசாரத்தை அவமதித்து விட்டதாகவும் கூறி வலதுசாரி அமைப்புகள் ஷில்பா ஷெட்டிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். மேலும், ஷில்பா ஷெட்டி மற்றும் ரிச்சர்டு மீது ராஜஸ்தானில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், அந்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி 2017-ம் ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்டது.

பொதுஇடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டதாக ரிச்சர்டு மற்றும் ஷில்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் வழக்கில் இருந்து ரிச்சர்டு விடுவிக்கப்பட்டார். ஆனால், ஷில்பா ஷெட்டி மீது வழக்கு நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வழக்கில் இருந்து ஷில்பாவை விடுதலை செய்து மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டது. ஷில்பா ரிச்சர்டு ஹிரியின் செயலால் பாதிக்கப்பட்டவர் அவர் எந்த குற்றசெயலையும் செய்யவில்லை என்று கூறி ஷில்பா ஷெட்டியை வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்து வழக்கையும் முடித்து வைத்தது.

இந்நிலையில், வழக்கில் இருந்து ஷில்பா ஷெட்டி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை கீழமை கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, ஷில்பா ஷெட்டி வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools