X

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி! – எச்.ராஜா வரவேற்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதற்கு, பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது:

திருவாரூர் தொகுதி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.வுக்கும் தி.மு.கவுக்கும் பயம் ஏற்பட்டு இருப்பது தெளிவாகி உள்ளது.

கலைஞருக்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஆனால் இதற்கு மு.க.ஸ்டாலின் நன்றி கூட தெரிவிக்கவில்லை. தி.மு.க. தற்போது சுய சிந்தனையோடு செயல்படவில்லை. உடல்நலம் குன்றி இருந்த கலைஞரை சோனியா காந்தி சந்திக்க வரவில்லை. ஆனால் பிரதமர் மோடி கோபாலபுரம் வந்து கலைஞர் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்தார்.

சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பாரபட்சமாக நடந்து வருகிறார். கேரளாவில் தேவாலயம் தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அவர் இதுவரை செயல்படுத்தவில்லை. ஊடகங்களில் விவாதம் செய்பவர்கள் அறிவின்மையமாக பேசுகின்றனர்.

தற்போது ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அறநிலையத்துறையில் ஊழல் மலிந்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அந்த துறையால் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

சிலை கடத்தல் வழக்கில் கடும் முயற்சியுடன் செயல்பட்டு வரும் பொன் மாணிக்கவேலுக்கு வேண்டிய உதவிகளை இந்த அரசு செய்து கொடுக்க வேண்டும். மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ. 1500 கோடி முன் பணம் கேட்டது. மத்திய அரசு ரூ. 8 ஆயிரம் கோடி நிதி அளித்துள்ளது.

ஜெயலலிதா மரண விவகாரத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா வெற்றி பெறும். சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் வேறுபாடின்றி மக்கள் வாக்களிப்பார்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. மக்களை பாதிக்கும் திட்டங்கள் எப்போதும் தமிழகத்துக்கு வராது.

மீத்தேன் எடுக்க அனுமதி அளித்தது தி.மு.க.-காங்கிரஸ். தமிழகத்தை பாதிக்கும் திட்டத்தை கொண்டு வந்தது தி.மு.க.வும் காங்கிரசும் தான். ஆனால் தமிழகத்தை பாதுகாப்பது மத்திய அரசுதான். மக்களுக்கு இது தெரியும்.

மின்சாரத்தை பூமிக்கடியில் கொண்டு செல்வது சாத்தியம் இல்லை. விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

Tags: south news