ஹெலிகாப்டரில் பறந்தபடி பிரசாரம் செய்யும் புதுச்சேரி பா.ஜ.க வேட்பாளர்

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி 4 பிராந்தியங்களாக உள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்கள் உள்ளன. காரைக்கால் மாவட்டம் தலைநகரான புதுச்சேரியில் இருந்து 132 கி.மீ. தூரத்தில் தமிழகத்தின் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு மத்தியில் உள்ளது.

மாகி பிராந்தியம் 614 கி.மீ. தூரத்தில் கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் அருகே அரபிக்கடலோரம் உள்ளது. மற்றொரு பிராந்தியமான ஏனாம் 822 கி.மீ. தூரத்தில் ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் மத்தியில் உள்ளது.

புதுச்சேரியில் இருந்து மாகி செல்ல 15 மணி நேரமும், ஏனாம் செல்ல 18 மணி நேரமும் சாலையில் பயணிக்க வேண்டும். பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் இங்கு சென்று பிரசாரம் செய்ய பல்வேறு சிரமம் உள்ளது. கால விரயமும் ஏற்படும்.

தமிழகம், புதுச்சேரியில் முதல்கட்டமாக வருகிற 19-ந் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. இதனால் குறைந்த நாட்களே பிரசாரத்துக்கு அவகாசம் உள்ளது. வேட்பாளர்கள் 15 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும். இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு 3 மாநிலங்களில் பரவியுள்ள புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் சிரமத்தை கவனத்தில் கொண்டு கட்சி தலைமை உதவிக்கரம் நீட்டியுள்ளது.

ஏனாம், மாகி, காரைக்கால் பிராந்தியங்களுக்கு பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம் விரைவாக சென்று பிரசாரம் செய்ய கட்சி தலைமை ஹெலிகாப்டர் வழங்கியுள்ளது. புதுச்சேரிக்கு நாளை (புதன்கிழமை) தனியார் நிறுவன ஹெலிகாப்டர் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

அங்கிருந்து தேவைப்படும் நேரத்தில் ஹெலிகாப்டரை நமச்சிவாயம் பயன்படுத்தி மற்ற பிராந்தியங்களுக்கு சென்று பிரசாரம் செய்ய கட்சித்தலைமை ஏற்பாடு செய்துள்ளது. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையால் பா.ஜனதாவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools