12ம் வகுப்பு தணித்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

பிளஸ்-2 பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் திருப்தி இல்லை என்று கருதுகிறவர்களுக்கும், அதேபோல் பள்ளி அளவில் தேர்வு எழுதாத தனித்தேர்வர்களுக்கும் ஆகஸ்டு மாதம் தேர்வு நடத்தப்படுகிறது.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

2020-21-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 படித்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 19-ந்தேதி அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள், இன்று முதல் 27-ந்தேதி வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் வாயிலாக பிளஸ்-2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்வாறு விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்து பாட தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் குறிப்பிட்ட பாட தேர்வுகளை மட்டும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க இயலாது. மேலும் தற்போது எழுத உள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் இறுதியானது.

அதேபோல் பிளஸ்-2 தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களும் மேற்குறிப்பிட்ட நாட்களில் துணைத் தேர்வு எழுத சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இந்த துணைத் தேர்வை எழுத மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

27-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க தவறும் மாணவர்கள் 28-ந்தேதியன்று ஆன்லைனில் சேவை மையங்கள் மூலம் ‘தக்கல்’ திட்டத்தில் ரூ.1,000 சிறப்பு அனுமதி கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்துக் கொள்ளலாம்.

இவர்களுக்கான துணைத்தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6, 9, 11, 13, 16, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை இந்த எழுத்துத் தேர்வு நடைபெறும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools