2வது ஒரு நாள் போட்டி – பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

தென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறினார்கள். பாகிஸ்தானின் ஹசன் அலி 59 (45) மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் கண்டார். இவர் 5 பவுண்டரிகளும், 3 சிக்சர்களையும் விளாசினார். கேப்டன் சர்ப்ராஸ் அகமது 41 (59) ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ரன்கள் எடுத்தது.

தென்ஆப்பரிக்கா சார்பில் பெலுக்வாயோ 4 விக்கெட்டுகளும், ஷம்சி 3 விக்கெட்டுக்களையும், ரபாடா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

204 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ஹெண்ட்ரிக்ஸ், அம்லா களமிறங்கினர். ஷகின் ஷா அப்ரிடி வீசிய இரண்டாவது ஓவரை எதிர்கொண்ட அம்லா 8 (5) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். ஷகின் ஷா அப்ரிடி வீசிய நான்காவது ஓவரில், 5 ரன்கள் எடுத்திருந்த ஹெண்ட்ரிக்ஸ் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். கேப்டன் பேஃப் டு பிளசிஸ் 8 ரன்னில் வெளியேறினர்.

இதையடுத்து ஹி வேன் டெர் டுசன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 42 ஓவர்களில் தென்ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பொறுப்புடன் விளையாடிய டுசன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80 (123) ரன்கள் சேர்த்தார். மில்லர் 31 (26) ரன்னில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் சார்பில் ஷகின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுக்களும், ஷதப் கான் 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

4 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்ஆப்பிரிக்காவின் பெலுக்வாயோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், 1-1 என தென்ஆப்பிரிக்க அணி சமன் செய்தது. 3-வது ஒருநாள் போட்டி 25-ந் தேதி செஞ்சூரியனில் நடைபெற இருக்கிறது. #SAvPAK

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools