2 திமுக அமைச்சர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம்

தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை அமைச்சர்களாக இருந்த பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். அ.தி.மு.க. ஆட்சியின்போது தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பான விசாரணை கீழ் கோர்ட்டுகளில் நடைபெற்று வந்தது. விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வந்த பொன்முடி மீதான வழக்கு விசாரணை ஐகோர்ட்டு நிர்வாக உத்தரவின்பேரில் வேலூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இருந்து கடந்த ஜூன் மாதம் பொன்முடியை விடுவித்து வேலூர் நீதிபதி உத்தரவிட்டார்.

இதேபோன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு கடந்த டிசம்பர் மாதம் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்தது. இதற்கு எதிராக ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தாமாக முன் வந்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விளக்கம் அளிக்க அவர் உத்தரவிட்டார். அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், இப்படி தாமாக முன்வந்து விசாரணை நடத்துவது தவறான முன்னுதாரணமாகி விடும். லஞ்ச ஒழிப்பு போலீசார் இதன் மூலம் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று வாதிட்டார். இதற்கு பதில் அளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடே சன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தவறு நடக்கும்போது கண்ணை முடிக்கொண்டு இருக்க முடியுமா? ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதி அளித்த தீர்ப்பை படித்து விட்டு 3 நாட்கள் நான் தூங்கவில்லை. அமைச்சர்கள் விடுவிக்க கோரி மனு அளித்தபோது முதலில் எதிர்ப்பு தெரிவித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை அதிகாரி பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்புக்கு ஒரு வடிவத்தை வைத்துக்கொண்டு தேதியை மட்டும் மாற்றி தீர்ப்பு கூறியது போல தெரிகிறது. யார் அதிகாரத்துக்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப் போகச் செய்கிறார்கள்.

சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்படும் விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதாலேயே தாமாக முன் வந்து விசாரணை நடத்தப்பட்டது. நீதிமன்றம் என்பது குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது. கட்சிக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல. அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் ஒரே மாதிரியாக உள்ளன. இதனை பார்த்ததும் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் கடமையில் இருந்து தவறியது போல் ஆகி விடும். எனவே இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் 2 அமைச்சர்களும் உரிய பதில் அளிக்க உத்தரவிடுகிறேன்.

இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.

பொன்முடி வழக்கில் ஏற்கனவே இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news