X

2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கேப்டனாக இருப்பேன் என்று எதிர்ப்பார்த்தேன் – யுவராஜ் சிங்

2007-ம் ஆண்டு முதல் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இதில் டோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.

இதற்கு முன்பாக நடந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

அதன்பின் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. கேப்டனாக டோனி முதல் முறையாக நியமிக்கப்பட்டார். அதன்பின் டோனி வெற்றிகரமாக கேப்டனாக அசத்தினார்.

இந்த நிலையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என எதிர்பார்த்தேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

2007-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறியதால் கடும் கொந்தளிப்புகள் இருந்தது. பின்னர் இரண்டு மாத இங்கிலாந்து சுற்றுப்பயணமும், தென்ஆப்பிரிக்காவுக்கும், அயர்லாந்துக்கும் ஒரு மாத சுற்றுப்பயணமும் இருந்தது.

அதன்பின்னர் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடந்தது. வெளிநாட்டில் 4 மாதம் சுற்றுப்பயணம் இருந்தது. எனவே மூத்த வீரர்கள் தங்களுக்கு இடைவெளி தேவை என்று நினைத்தார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் 20 ஓவர் உலக கோப்பையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். பின்னர் டோனி கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. யார் கேப்டன் ஆனாலும், அது ராகுல் டிராவிட்டாக இருந்தாலும், கங்குலியாக இருந்தாலும் எதிர்காலத்தில் யாராக இருந்தாலும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நான் அதை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை இந்தியா வெல்ல யுவராஜ்சிங் முக்கிய காரணமாக இருந்தார். இந்த போட்டி தொடரில் தான் யுவராஜ் சிங் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 6 சிக்சர் அடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.