ஆடி மாதம் என்றாலே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் முழுவதும் அம்மன் கோவில்களில் விமர்சையாக ஆடி மாத திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ தீப்பாஞ்சம்மன், ஸ்ரீ பழண்டியம்மன், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ செங்கழனி அம்மன் திருக்கோயிலின் 24-வது ஆண்டு தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றதோடு, இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், ஒத்திவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சம்மன், ஸ்ரீ பழண்டியம்மன், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ செங்கழனி அம்மன் திருக்கோயிலின் 24-வது ஆண்டு தீமிதி திருவிழா ஆகஸ்ட் 16-ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆடி மாதம் 31-ஆம் தேதி, சதுர்த்தி திதி, அஸ்த நட்சத்திரம் மற்றும் அமிர்த யோகம் கூடிய சுபநாளில் நடைபெற்ற இவ்விழாவில், மாலை 6.30 மணியளவில் தீமிதி திருவிழா மற்றும் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற தீமிதி நிகழ்ச்சியில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விழாவில் ஒத்திவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள்பெற்றனர். பக்தர்களின் வசதிக்காக ஆலய நிர்வாகக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு ஆலய நிர்வாகக் குழுவினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.