முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35 ஆவது நினைவு தினமான இன்று, அவரது நினைவிடமான வீர் பூமியில் மலர் அஞ்சலி செலுத்திய பின், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் தன் தந்தைக்கு நெகிழ்ச்சியான முறையில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
“அன்பு அப்பா, நீங்கள் உங்களது தொலைநோக்குப் பார்வையால் கற்பனை செய்த திறமையான, வளமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்கான உன்னதப் பொறுப்பை நான் முழுமையாக என் தோள்களில் சுமப்பேன்; உங்களது போதனைகளும், நீங்கள் கற்றுக்கொடுத்த நற்பண்புகளும், உங்களது நினைவுகளும் எப்போதும் என் வாழ்நாளில் என்னோடு பயணித்து என்னை வழிநடத்தும்” என்று ராகுல் காந்தி உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
நவீன இந்தியாவை வடிவமைப்பதில் ராஜீவ் காந்தியின் பங்களிப்பையும், அவரது தியாகத்தையும் நினைவுகூர்ந்து காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோருடன் இணைந்து தேசமே இந்த நாளில் தங்களின் அஞ்சலியைச் செலுத்தி வருகிறது.