4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி

தமிழகத்தில் வேலூர் பாராளுமன்ற தொகுதி நீங்கலாக ஏனைய 38 தொகுதிகளுக்கு கடந்த 18-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், இந்த தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்ததால், தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்திருந்தது.

அதன்பிறகு, சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 3 சட்டமன்ற தொகுதிகள் தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வந்தன. அதன்பின்னர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் 7-வது கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நாளான மே மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது.

இந்த நிலையில், 4 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் பா.க. செல்வம், ஒட்டப்பிடாரம் தொகுதியில் மு.அகல்யா, சூலூர் தொகுதியில் வெ. விஜயராகவன், திருப்பரங்குன்றம் தொகுதியில் ரா.ரேவதி ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news