தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி என்கிற எஸ்.ஐ.ஆர். பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கியது. இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை கொடுத்து அதனை பூர்த்தி செய்து பெற்றனர்.
இந்த படிவங்களில், கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டு சம்பந்தப்பட்ட வாக்காளரின் பெயர் இடம் பெற்றிருந்த சட்டசபை தொகுதிகளின் விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன. இந்த படிவத்தை, பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சுமார் 40 நாட்கள் நடந்த இந்த பணி, டிசம்பர் மாதம் 14-ந் தேதி நிறைவடைந்தது. அதன் தொடர்ச்சியாக 18-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த எஸ்.ஐ.ஆர். பணி தொடங்குவதற்கு முன்பு தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பின்பு வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 757 வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தனர். அதாவது சுமார் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதில் இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 27 லட்சம் பேர் ஆகும். நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 45 ஆயிரம் பேர். இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் மற்றவர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.
நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் எனக்கூறி நீக்கப்பட்ட 66 லட்சத்து 45 ஆயிரம் பேரும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு 6-ம் எண் படிவத்தை கொடுக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அதற்கான கால அவகாசமும் வழங்கி சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. ஆனால் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30-ந் தேதி(நேற்று) என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு நடந்து வருவதால், கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்ற நிலையில் அதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிடவில்லை.
இதுபோன்ற சூழ்நிலையில் டிசம்பர் 18-ந் தேதி முதல் நேற்று வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 16 லட்சத்து 72 ஆயிரத்து 874 பேர் விண்ணப்பம் கொடுத்து இருக்கிறார்கள். மேலும், இந்த தேதிக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஆக மொத்தம் சுமார் 22 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அதில் தோராயமாக 2½ லட்சம் மனுக்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க அளிக்கப்பட்ட மனுக்கள் (18 வயது பூர்த்தி அடைந்தவர்கள்) ஆகும். மீதமுள்ள 19 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஏற்கனவே நீக்கப்பட்டவர்கள் அளித்துள்ள மனுக்கள் என மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆர்வம் காட்டாத 47 லட்சம் பேர்அப்படியென்றால் நீக்கப்பட்ட 66 லட்சத்து 45 ஆயிரம் பேரில் இப்போது, 19 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே மீண்டும் விண்ணப்பம் அளித்து இருக்கிறார்கள். சுமார் 47 லட்சம் பேர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆர்வம் இல்லாமல் மனு கொடுக்கவில்லை.
இந்த புதிய மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிற 17-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படலாம் என தெரிகிறது. ஒருவேளை இந்த தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் 5 கோடியே 43 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் இப்போது மனு கொடுத்தவர்கள் 22 லட்சம் பேர் அப்படியே சேர்ந்தாலும், வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 65 லட்சத்து ஆயிரம் பேர் மட்டுமே இருப்பார்கள்.
அதேவேளையில், இந்த வரைவு பட்டியலில் பெயரை நீக்கம் செய்வதற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த பெயர்கள் நீக்கப்பட்டால் இறுதி வாக்காளர் பட்டியலில் தோராயமாக 5 கோடியே 63 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் இடம் பெறுவார்கள் என தெரிகிறது.
இந்த இறுதிப்பட்டியலின் அடிப்படையில் தான் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களில் 47 லட்சம் பேர் மீண்டும் பெயரை சேர்க்க மனு அளிக்காதது அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.