தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, வரும் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு முடியும் வரை 48 மணி நேர அமைதிக் காலத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, இன்று மாலை முதல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவோ அல்லது அதில் பங்கேற்கவோ யாருக்கும் அனுமதியில்லை; மேலும் தொலைக்காட்சி, வானொலி, இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாகத் தேர்தல் தொடர்பான எந்தவொரு தகவலையும் மக்களிடம் கொண்டு செல்லக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொகுதியின் வாக்காளர் அல்லாத வெளி நபர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இன்று மாலை 6 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், விதிகளை மீறுவோருக்கு இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று காலை முதல் வரும் 23-ஆம் தேதி நள்ளிரவு வரை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.