தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் சென்னையில் இருந்து 220 கி.மீ. தொலைவிலும் வேதாரண்யத்திலிருந்து 120 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
டிட்வா புயல் கடந்த 6 மணி நேரமாக 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் வடக்கு – வடமேற்காக நகர்ந்து வடதமிழகத்தை நெருங்கும். டிட்வா புயல் கரையை தொடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலின் மையப்பகுதி கடலோரப் பகுதியில் இருந்து அதிகபட்சமாக 25 கி.மீ. தூரத்திற்கு நெருங்கி வரும். டிட்வா புயல் இன்று மாலை வலுவிழக்கக்கூடும். டிட்வா புயல் சென்னையை நெருங்கும்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் நேற்று 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில் தற்போது கடலூர், புதுவை துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர், நாகை, புதுவை, காரைக்கால் துறைமுகங்களில் இடதுபுறம் புயல் கடப்பதை குறிக்கும் வகையில் 5-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.